Wednesday 3 July 2013

சிம் கார்டு வாங்குவதற்கும் கைரேகை கட்டாயம் புதிய விதிமுறையை கொண்டு வருகிறது மத்திய உள்துறை அமைச்சகம்


 புதுடெல்லி: மும்பை தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகளின் கையில் போலியான நபர்களின் பெயரில் சிம் கார்டுகள் கிடைப்பதை தவிர்க்க புதிய விதிமுறைகளை உள்துறை அமைச்சகம் கொண்டு வந்தது. அதன்படி முகவரி மற்றும் அடையாள சான்று இல்லாமல் சிம் கார்டுகள் விற்பனை செய்ய செல்போன் சேவை நிறுவனங்களுக்கும் அதன் முகவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை மீறுபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது. இருப்பினும் போலி சான்றிதழ்கள் கொடுத்து சிம் கார்டுகள் வாங்கப்படுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் எதிரொலியாக சிம் கார்டுகள் வாங்க கைரேகை பதிவுகளை கட்டாயமாக்கலாம் என்ற முடிவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வந்துள்ளது.

இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய தொலை தொடர்பு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிம்கார்டு வாங்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து கைரேகையோ அல்லது இதர பயோமெட்ரிக் பதிவுகளையோ வாங்குவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. செல்போன் சேவை நிறுவனங்களிடம் கலந்தாலோசித்த பின் உள்துறை அமைச்சக கடிதத்துக்கு பதில் அளிக்கப்படும் என தொலைதொடர்பு துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆதார் அட்டை பெறுவதற்கு கைரேகை எப்படி கட்டாயமோ அது போல் விரைவில் சிம் கார்டு வாங்குவதற்கும் கைரேகை கட்டாயமாக்கப்படும் என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment