Friday 28 June 2013

எஸ்.எம்.எஸ்., ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்



புதுடில்லி: எஸ்.எம்.எஸ்., மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி, துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. ரயில்வே முன்பதிவு மையங்கள், ஆன்-லைன், ரயில்வே ஏஜன்சிகள், .ஆர்.சி.டி.சி., ஆகியவை மூலம், ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதில், ஆன்-லைன் டிக்கெட் புக்கிங் செய்ய, இணையதளம் வசதி, ஸ்மார்ட் போன் இருந்தால் தான் பெற முடியும்.
இப்போது, மொபைல் போன்களை இந்தியா முழுவதும், 80 சதவீத மக்கள் பயன்படுத்துகின்றனர். இதில், ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை குறைவு தான்.
சாதாரண மக்களும், ஆன்-லைனில் புக்கிங் செய்யும் வகையில், மொபைல் போனில் இருந்து, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை, ரயில்வே துவக்கி வைத்துள்ளது. எஸ்.எம்.எஸ்., டிக்கெட் முன்பதிவு சேவையை நேற்று, மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகா கார்ஜூன கார்கே துவக்கி வைத்தார்
.
அப்போது அவர் கூறியதாவது: வெளியூரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக, முன்பதிவு மையங்களுக்கு வந்து, வரிசையில் காத்து இருக்கின்றனர். இதனால், ஒரு நாள் சம்பளத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இன்டர்நெட் வசதியில்லாத, மொபைல் போன்கள் மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை துவக்கியுள்ளோம். இதை அமல்படுத்துவதில் உள்ள சங்கடங்கள் படிப்படியாக குறைக்கப்படும். .ஆர்.சி.டி.சி.,யின் ஆன்-லைன் புக்கிங் மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு, 45 சதவீதம் நடக்கிறது. இன்டர்நெட் வசதி இந்தியாவில், 10 சதவீதம் தான் உள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோர், 80 சதவீதம் உள்ளதால், எஸ்.எம்.எஸ்., டிக்கெட் முன்பதிவுக்கு, அதிக வரவேற்பு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

எஸ்.எம்.எஸ்., டிக்கெட் புக்கிங் குறித்து, .ஆர்.சி.டி.சி., சேர்மன் ராகேஷ் டான்டன் கூறியதாவது:
இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர், முதலில் .ஆர்.சி.டி.சி.,யில் தங்கள் மொபைல் போன் எண்ணை அனுப்பி, பதிவு செய்து கொள்ள வேண்டும். சேமிப்பு கணக்கு வைத்துள்ள ஒரு வங்கி அளிக்கும், "மொபைல் மணி அடையாள' எண் மற்றும் ஒன் டைம் பாஸ்வேர்ட்டையும் அனுப்பி பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக, 139 மற்றும் 5676714 எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.
குற்றாலத்தில் வெயில் தலைகாட்டியது *அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றாலம் : குற்றாலத்தில் தொடர்ந்து தலைகாட்டி வந்த வெயிலினால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்த வண்ணம் இருந்தபோதிலும் சுற்றுலாப் பயணிகள் மெயினருவியில் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்தில் கடந்த வாரம் மலைப்பகுதியில் வெளுத்துவாங்கிய கனத்த மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தடைவிதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் தடை விலக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் நேற்று முன்தினம் குற்றாலத்தில் பரவலாக வெயில் காணப்பட்ட நிலையில் நேற்றும் மதியம் வரை வெயில் தொடர்ந்து தென்பட்டது.அருவிகளில் பரவலாக தண்ணீர் விழுந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் மெயினருவியில் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஐந்தருவி, பழையக்குற்றாலத்தில் அருவிகளில் சற்று அதிகமாக தண்ணீர் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மாலைக்கு பிறகு மெல்லிய தென்றல் காற்றுடன், லேசான சாரலும் ஆங்காங்கே பெய்தவண்ணம் இருந்தது. மலைப்பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
சூரியகாந்தி விளைச்சல் அமோகம் குவிண்டால் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை





சுரண்டை, : சுரண்டை பகுதியில் சூரியகாந்தி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு குவிண்டால் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாகிறது.
நெல்லை மாவட்டம் சுரண்டை பகுதியில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதனால்  சாகுபடி பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர்.
இருப்பினும் ஒரு சில விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டபோதிலும், நிலத்தில் நீர்பிடிப்பு இல்லாததால் சிரமத்தை எதிர்கொண்டனர். இதையடுத்து விவசாயிகள் சூரியகாந்தி பயிர் செய்வதில் ஆர்வம் செலுத்தினர். சுரண்டை, சுந்தரபாண்டியபுரம், மேலப்பாவூர், கீழப்பாவூர், துவரங்காடு, வெள்ளக்கால், குருங்காவனம், மற்றும் சுற்றுப்புற பகுதி விவசாயிகள் அதிகளவில் சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர். குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டலாம் என்பதால்  சூரிய காந்தியை ஆர்வமுடன் சாகுபடி செய்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி மாடசாமி கூறுகையில், ‘தற்போது மழை சரிவர பெய்யாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தில் நீர்பிடிப்பு தன்மை குறைந்துவிட்டதால் சூரியகாந்தி சாகுபடி செய்துள்ளோம்.

இதற்கு அதிகப்படியான தண்ணீர், உரம் தேவைப்படாது என்பதால் எங்களுக்கு செலவு குறைவு. பயிர் செய்த 90 நாளில் இருந்து 120 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகி விடுகிறது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு கூடுதல் மகசூல் கிடைத்துள்ளது. அத்துடன் அதிக லாபமும் கிடைக்கிறது. ஒரு குவிண்டால் ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாகிறதுஎன்றார்.