Wednesday 3 July 2013

குற்றால சாரல் விழா 27-ந்தேதி தொடக்கம்


 நெல்லை, ஜூலை.2-

குற்றாலம் சாரல் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. சாரல் விழாவை வரும் 27-ந்தேதி முதல் ஆகஸ்டு 2-ந்தேதி வரை நடத்தவும், விழா நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் சதுரங்கம், கோலப்போட்டி, இந்திய கலாசார ஆடை அலங்காரப் போட்டி, படகுப்போட்டி, வாலிபால், நீச்சல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

சாரல் விழாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவ வசதிகளை செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. சுற்றுச்சூழல் பூங்கா பகுதியில் மலர், பழங்கள், காய்கறி, வாசனைப் பொருட்கள், நாய்கள், பாரம்பரிய உணவுகள், பாரம்பரிய கார்கள் கண்காட்சி நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குற்றாலத்தில் சீசன் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அவசர கால ஊர்தி, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. குற்றாலத்தில் பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.


ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் விஜயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், தென்காசி கோட்டாட்சியர் மகேஷ், சுற்றுலா அலுவலர் சிவ.மாலையா, தோட்டக் கலை துணை இயக்குநர் ராஜன் ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சவுந்தரராஜன், மாவட்ட சமூகநல அலுவலர் பூங்கோதை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment