Monday 24 June 2013

இந்திய அணி சாம்பியன் : இங்கிலாந்தை வீழ்த்தியது











லண்டன்: லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.நேற்று நடந்த பைனலில் இங்கிலாந்து அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்‌‌தி கோப்பையை கைப்பற்றியது.

இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. இறுதிப்போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் செய்தார்.ஆனால் மைதானத்தில் பெய்த கனமழை காரணமாக போட்டி துவங்குவதில் பல மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதன் பின்னர் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் பவுண்டரி அடித்த ரோகித் சர்மா (9), ஸ்டூவர்ட் பிராட் "வேகத்தில் போல்டானார். இந்திய அணி 5.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட, போட்டி நிறுத்தப்பட்டது. மழை விட, மீண்டும் போட்டி நடத்தப்பட்டது.
டிரட்வெல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசிய தவான் 31 ரன்களில் அவுட்டானார். தினேஷ் கார்த்திக் (6) சொற்ப ரன்னில் வெளியேறினார். ரெய்னா (1) ஒற்றை இலக்கில் பெவிலியன் திரும்ப, கேப்டன் தோனி "டக்-அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்தடுத்து விக்கெட்கள் சரிய அணி தடுமாறியது. போபரா பந்துவீச்சில் கோஹ்லி இரண்டு பவுண்டரிகள் அடித்தார். இவருடன் ஜடேஜா ஜோடி சேர, ஆட்டம் சூடுபிடித்தது. பிரஸ்னன், டிரட்வெல் ஓவரில் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடிக்க, ரன் உயர்ந்தது. கோஹ்லி 43 ரன்னில் அவுட்டானார். அஷ்வின் (1) நிலைக்கவில்லை. கடைசி கட்டத்தில் பிரஸ்னன் பந்தை ஜடேஜா சிக்சருக்கு பறக்கவிட்டார்.
இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (33), புவனேஷ்வர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் போபரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணிக்கு கேப்டன் குக் 2 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். புவனேஷ்வர் ஓவரில் டிராட் இரண்டு பவுண்டரி விளாசினார். இதன் பின் அஷ்வின் சுழல் ஜாலம் காட்டினார். முதலில் டிராட்டை 20 ரன்னுக்கு அவுட்டாக்கிய இவர், பின் வந்த ரூட்டையும் 7 ரன்னுக்கு பெவிலியன் திருப்பினார். அடுத்த ஓவர் வீச வந்த ஜடேஜா தன் பங்கிற்கு பெல்லை (13) அவுட்டாக்கினார். இதனால் அணி 9 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது. பின் இணைந்த இயான் மார்கன், போபரா ஜோடி ஆட்டத்தை தன் வசப்படுத்தியது. இஷாந்த், ரெய்னா ஓவரில் தலா ஒரு பவுண்டரி விளாசினார் மார்கன்.
மறுமுனையில் இஷாந்த், ஜடேஜா பந்துவீச்சில் போபரா தலா ஒரு சிக்சர் அடிக்க, ரன்கள் உயர்ந்தது. இதன் பின் இங்கிலாந்து அணிக்கு சிக்கல் துவங்கியது. மார்கன் (33), போபரா (30) இருவரையும் இஷாந்த் பெவிலியன் அனுப்பிவைக்க, வெற்றி உறுதியானது. பட்லரும் டக்-அவுட்டானார். பிரஸ்னன் (2) ரன்-அவுட்டானார். இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பிராட் (7), டிரட்வெல் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா, அஷ்வின், இஷாந்த் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் விருது ரவீந்திரா ஜடேஜாவுக்கு கொடுக்கப்பட்டது. தங்க பந்து விருதும் ஜடேஜாவுக்கு வழங்கப்பட்டது. அதிக ரன் குவித்ததற்காக ஷிகார் தவானுக்கு விருது தங்க பேட் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உத்தர்கண்ட வெள்ளத்தில் பலியானவர்களுக்கு சமர்ப்பிப்பதாக தவான் கூறினார்.


முன்னதாக கடந்த 2002ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், மழை காரணமாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பைபயை இந்தியா, இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.