Monday 15 July 2013

இந்தியாவில் 160 ஆண்டுகள் நீடித்த தந்தி சேவை முடிவுக்கு வந்தது




புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 160 ஆண்டுகளாக இன்ப, துன்பங்களை சுமந்து வந்த தந்தி சேவை முடிவுக்கு வந்தது. கடைசி நாளில் வரலாற்று பதிவாக இருக்கும் என்று  ஆயிரக்கணக்கானோர் தங்கள் உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்து தந்தி கொடுத்தனர். நேற்றிரவு 9 மணியுடன் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.   இந்தியாவில் தந்தி சேவை முதல் முறையாக ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது 1850ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியால் கொல்கத்தா துறைமுகத்துக்கும், இங்கிலாந்தில் உள்ள டைமண்ட் துறைமுகத்துக்கும் இடையே அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் 1854ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியா முழுவதும் தந்தி சேவையை கொண்டு வந்தனர். தந்தி சேவைக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆண்டு தோறும் ணீ100 கோடியை செலவிட்டு வந்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.75 லட்சம் வருவாய் கிடைத்து வந்தது. இந்தியாவில் தந்தி சேவை முந்தைய காலங்களில் விஞ்ஞான பொக்கிஷம் என்று சொல்லலாம், அந்த அளவுக்கு இச்சேவை முக்கியமானதாக கருதப்பட்டது.

 வெளியூரில் நடக்கும் திருமணத்திற்கு செல்ல முடியாதவர்கள் வாழ்த்து தெரிவிக்கவும், வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புகிறவர்கள் அது குறித்து தகவல் தெரிவிக்கவும், நெருக்கமான ஒருவர் இறந்து விட்டால் தகவல் தெரிவிக்க, வேலை வாய்ப்புக்கான நேர் காணல் அழைப்பு போன்றவவை அனுப்ப தந்தி சேவை பயன்பட்டு வந்தது.

பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களுக்கும் தந்தி சேவை மிகவும் வசதியான சேவையாக இருந்து வந்தது. காரணம் கடிதத்தை விட தந்தி வேகமாக சென்று சேர்ந்து விடும். கிராமங்களில் ஒருவர் வீட்டிற்கு தந்தி வந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என்ன ஏதோ என்று பதறும் நிலைமையும் இருந்தது. இதுவும் காலப்போக்கில் மாறியது. தந்தியை எவ்வித பயமும் இன்றி கையாள தொடங்கினர்.

ஆனால் இன்டர்நெட், செல்போன் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் வந்தவுடன் தந்தி சேவை யின் பயன்பாடு படிப்படியாக மங்கத் தொடங்கியது. இதனால் தந்தி சேவையை நிறுத்தி கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்தது. தற்போது நாட்டில் 75 தந்தி சேவை மையங்கள் உள்ளன. ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் பிஎஸ்என்எல்லில் வேறு துறைக்கு மாற்றப்படுகின்றனர்.

கடைசி நாள் என்பதால் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள தந்தி அலுவலகங்களில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது. மும்பை, கொல்கத்தா, டெல்லியில் இளைஞர்களும் முதியோரும் தங்கள் உறவினர்களுக்கு கடைசியாக வாழ்த்து தந்தி அனுப்பினர். இனிமேல் இந்த சேவை கிடையாது என்பதால் பலர் வருத்தத்தோடு இருந்தனர்.

கடந்த 160 ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையோடு இன்பங்களையும், துன்பங்களையும் சுமந்து வந்து உறவாடிய தந்தி சேவை நேற்றிரவு 9 மணியுடன் நம்மிடம் இருந்து பிரியா விடை பெற்றது. கடைசி நாள் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள தந்தி அலுவலகங்களில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் நேற்று தந்தி அனுப்பினர். சென்னையை பொறுத்தவரை அண்ணா சாலை தந்தி அலுவலகம், பாரிமுனை ஜி.பி. கட்டிடம் மற்றும் எத்திராஜ் சாலையில் உள்ள தந்தி அலுவலகங்களில் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. தந்தி சேவையை நிறுத்த வேண்டாம் என மூத்த குடிமக்கள் பலர் மத்திய அரசுக்கு நேற்று தந்தி அனுப்பினர்.

கடைசி நாள் என்பதால் பலர் அடுத்த தலைமுறையினருக்கு தந்தி சேவை குறித்து சொல்ல தனக்கு தானேயும், உறவினர்களுக்கும் தந்தி அனுப்பி வாழ்த்து செய்திகளை பறிமாறிக் கொண்டனர். அதே போல், பெற்றோர் சிலர் தங்கள் சின்ன வயது மகன், மகள்களுக்கு தந்தி அனுப்புவதற்கான விண்ணப்பங்களை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பதை சொல்லி கொடுத்த காட்சியை காணமுடிந்தது.

மேலும் கடைசி நாள் என்பதால் முக்கிய தந்தி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டன. இந்த பதிவுகளை வரும் காலங்களில் நடத்தப்படும் கண்காட்சிக்கு பயன்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வளவு நாள் தந்தி அனுப்ப வருபவர்களிடம் இன்பங்களையும், துன்பங்களையும் பகிர்ந்து கொண்டோம். இனி இது போன்ற நிகழ்வுகளை காண்பது என்பது முடியாத காரியம். இதுவரை தந்தி சேவைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததற்காக தந்தி ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்

சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள தந்தி அலுவலக ஊழியர்கள் கூறுகையில், ‘ ஒரு நாளைக்கு இங்கிருந்து அதிகபட்சம் 50 தந்தி வரை செல்லும். தந்தி சேவைக்கு கடைசி நாள் என்பதால் நேற்று மட்டும் இரவு 7 மணி வரை 350 தந்திகள் வரை அனுப்பப்பட்டன. அண்ணா சாலை தந்தி அலுவலகத்தில் 400 தந்திகள் வரை பெறப்பட்டன. சாதாரண நாட்களில் 50 தந்திகள் தான் இங்கிருந்து அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

160 ஆண்டுகள் சேவை வழங்கிய தந்தி சேவையை நிறுத்த கூடாது என்று தந்தி நிறுவன ஊழியர்கள், தந்தி சேவையை நேற்று கடைசியாக பயன்படுத்த வந்தவர்கள் நூற்றுக்கணக்கில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபலுக்கு தந்தி அனுப்பினர். கடைசியாக தந்தி கொடுப்பது 9 மணியோடு நிறுத்தப்பட்டது. அது வரை பெறப்பட்ட தந்திகள் அனைத்தும் முழுமையாக உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தோஷம்... வருத்தம்

* தந்தி என்று வந்தாலே போதும், குஷியை விட குடும்பத்தில் பயம் தான் கவ்வும்; அதை  திறந்து படிக்கும் வரை.
* மொபைல், எஸ்எம்எஸ் என்று அறிவியல் புரட்சியால் பலவீனம் அடைந்தது தந்தி.
*ராணுவத்தினருக்கு பெரிதும் கைகொடுத்தது தந்தி. லீவு, டிரான்ஸ்பர், பணி அழைப்பு எல்லாம் தந்தியில்தான்.
* கோர்ட்டில் வலுவான ஆதாரமாக தந்தி கருதப்பட்டது.
* குக்கிராமங்களில் மட்டும் தான் தந்தி சேவை கடைசி வரை முக்கிய தகவல் தொடர்பாக இருந்தது.
*தந்தி சேவைக்கு செலவு மிக அதிகம். 100 கோடி செலவுக்கு ஆண்டு வருமானம் 75 லட்சம் ரூபாய் தான்.
* 60 ஆண்டுக்கு பின் 2011 மே மாதம் தான் 50 வார்த்தைகளுக்கு ரூ.27 என்று கட்டணம் உயர்த்தப்பட்டது.
*கடைசி நாள் என்பதால் தந்தி கொடுப்பது வீடியோ எடுக்கப்பட்டது.
*மக்களிடம் காணப்பட்டது குஷி; ஆனால், ஊழியர்கள் என்னவோ கனத்த மனதுடன் பணியை முடித்தனர்.

* சினிமாவில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்த கைகொடுத்ததும் தந்திதான்.

No comments:

Post a Comment