Tuesday 25 June 2013

என்.எல்.சி. பங்குகளை வாங்க தமிழகம் தயார்:


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி.,) 5 சதவீத பங்குகளை விற்பது குறித்து கடந்த பல ஆண்டுகளாக பேச்சுகள் இருந்தன. அந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் என்.எல்.சி., பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தேன்.

இந்த நிலையில், என்.எல்.சி.,யின் 5 சதவீத பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி கடந்த மே 23-ஆம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். பங்குகளை விற்பனை செய்வதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாகவும் குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கடிதத்துக்கு தாங்கள் கடந்த 8-ஆம் தேதி எழுதிய பதில் கடிதத்தில், என்.எல்.சி., பங்குகளை விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்வது சாத்தியமில்லாதது எனத் தெரிவித்தீர்கள்.

மாநில பொருளாதாரம் பாதிக்கும்: மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கடந்த வாரம் கூடி, என்.எல்.சி., பங்குகளை விற்கும் முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. இதைக் கேள்விபட்டதும் அந்தப் பிரச்னை தொடர்பாக தங்களுக்கு கடந்த 22-ஆம் தேதி மீண்டும் கடிதம் எழுதினேன். நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிலாளர்களின் அச்சம் மற்றும் தமிழக மக்களின் உணர்வுகள் தொடர்பாக குறிப்பிட்டிருந்தேன்.


 பங்குகளை விற்கும் முடிவால், தொழிலாளர் அமைப்புகள் போராட்டம் நடத்தும் முடிவில் உள்ளன. வரும் 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை என்.எல்.சி. நிர்வாகத்திடம் தொழிலாளர் அமைப்புகள் அளித்துள்ளன.

இந்த நிலை தொடர்ந்தால், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் ஆலைகள் மூடப்படும் சூழல் உருவாகுமோ என்ற கவலை ஏற்படுகிறது. தமிழகம் ஏற்கெனவே மின் தட்டுப்பாட்டால் கடுமையான பாதிப்பில் உள்ளதை தாங்கள் அறிவீர்கள். இந்தச் சூழ்நிலையில், நெய்வேலி நிறுவனம் மூடப்பட்டால் மாநிலத்தின் பொருளாதார நிலை மோசமாகும். மக்களுக்கு மிகப்பெரிய சுமை ஏற்படும்.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட விஷயங்களை மோசமாக்கும். மிகவும் உணர்வுப்பூர்வமான மற்றும் முக்கியமான விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவைச் செயல்படுத்த வேண்டாம் என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசு வாங்கத் தயார்:

நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்கு விற்பனை பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் புதுமையான மற்றும் சாத்தியமுள்ள வழிகள் தேவை என்பதை நான் நன்கு அறிவேன். எனவே, என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம், மாநில தொழில் வளர்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்குத் தயாராக இருக்கின்றன.

எனவே, பொதுத் துறை என்ற தன்மையை நெய்வேலி பழுப்பு நிறுவனம் இழக்காமல் இருக்கவும் அதைப் பாதுகாக்கவும், அங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்களின் கொந்தளிப்பான உணர்வுகளை தணிக்கவும் என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறேன். தனியார்களுக்கு பங்குகளை விற்கக் கூடாது என்று தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

என்னால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த மாற்று யோசனையை தாங்கள் பரிசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன். தங்களிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment