Thursday 20 June 2013



பைனலில் இந்திய அணி : இலங்கையை விரட்டியது

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தியா.

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது இந்தியா.

முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

இங்கிலாந்தின் கார்டிஃப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டம், மழை காரணமாக அரைமணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் இலங்கை அணியில் சண்டிமால், எரங்கா ஆகியோருக்குப் பதிலாக ஜீவன் மெண்டிஸ், திசாரா பெரேரா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட் செய்த இலங்கை அணியில் குஷல் பெரேராவும், தில்ஷானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்ததால், அதை சரியாகப் பயன்படுத்திய இந்திய பெüலர்கள், இலங்கை அணியை சரிவுக்குள்ளாக்கினர்.

குஷல் பெரேரா 4 ரன்களில் வெளியேற, உமேஷ் யாதவ் வீசிய பந்து, தில்ஷானின் வலது காலை பதம்பார்த்தது. இதனால் அவர் 18 ரன்களுடன் "ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார். இதன்பிறகு திரிமானி 7, சங்ககாரா 17 ரன்களில் ஆட்டமிழக்க, 126-வது பந்தில்தான் இலங்கை அணி 50 ரன்களை எட்டியது.

இதன்பிறகு மஹேல ஜெயவர்த்தனா-மேத்யூஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தபோதும், அந்த அணியை சரிவிலிருந்து மீட்க முடியவில்லை. ஜெயவர்த்தனா 38, மேத்யூஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்வரிசையில் ஜீவன் மெண்டிஸ் 25 ரன்கள் எடுத்தார். இதனால் இலங்கை அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியா வெற்றி: பின்னர் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா- ஷிகர் தவன் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தித் தந்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 17 ஓவர்களில் 77 ரன்கள் சேர்த்தது. ரோஹித் 50 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து விராட் கோலி களம்புகுந்தார். இதனிடையே தவன் 73 பந்துகளில் அரைசதம் கண்டார். இந்தியா 142 ரன்களை எட்டியபோது மெண்டிஸ் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார் ஷிகர் தவன். அவர் 92 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ரெய்னா களம்புகுந்தார். மறுமுனையில் கோலி வேகமாக விளையாட 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா. கோலி 64 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 58, ரெய்னா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இஷாந்த் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பெளலரான தோனி...

இந்த ஆட்டத்தில் கேப்டன் தோனியும் பந்துவீசினார். விக்கெட் கீப்பராக களம்புகுந்த தோனி, ஒரு கட்டத்துக்குப் பிறகு தினேஷ் கார்த்திக்கிடம் கீப்பர் பணியை கொடுத்துவிட்டு, பந்து வீச வந்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 17 ரன்களை கொடுத்தார். ஆனால் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.


இங்கிலாந்துடன் மோதல்
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு இந்திய அணி, மூன்றாவது முறையாக (2000, 2002, 2013) முன்னேறியது. வரும் 23ல் பர்மிங்காமில் நடக்கும் பைனலில் இங்கிலாந்து அணியை சந்திக்கிறது.
* இதற்கு முன், 2000ல் நியூசிலாந்திடம் தோற்றது. மழை காரணமாக 2002ல் இலங்கை அணியிடம் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

No comments:

Post a Comment